பேஸ்புக் மூலம் பழகிய சென்னை பெண்ணை காதலிப்பதில் நண்பர்களிடையே மோதல்: வாலிபர் மீது தாக்குதல்

சேந்தமங்கலம் அருகே பேஸ்புக் மூலம் பழகிய சென்னை பெண்ணை காதலிப்பதில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் தாக்கப்பட்டார்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவர், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி அதில் நேரத்தை செலவழித்து வந்தார்.

இந்த நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டும் பேசி வந்த இருவரும், ஒரு கட்டத்தில் மணிக்கணக்கில் பேச தொடங்கினர். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

பின்னர் சுபாஷ், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். முதலில் அவரது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த பெண், சில நாட்கள் கழித்து காதலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இருவரும் தங்களது சொந்த வி‌ஷயங்களை பேஸ்புக்கில் தெரிவித்து இரவு பகலாக தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இது குறித்து தனது நண்பர் மணிகண்டனிடம் சுபாஷ் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மணிகண்டன் பேஸ்புக் பக்கத்தில் அந்த பெண்ணுடன் பேச தொடங்கி உள்ளார். அப்போது அந்த பெண்ணின் சொக்க வைக்கும் பேச்சில் மயங்கி, அவரை மணிகண்டன் காதலிக்க தொடங்கினார்.

ஆனால் அந்த பெண் தன்னை காதலிக்க வேண்டுமே என யோசித்த மணிகண்டன், தனது நண்பர் சுபாஷின் காதலை வெறுக்கும் வைக்கும் வகையில் அந்த பெண்ணிடம் பேசினார். இதனால் அந்த பெண், கடுப்பாகி சுபாஷூடனான காதலை துண்டித்து விட்டு, மணிகண்டனின் காதலை ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே தனது காதலி தன்னை நிராகரித்ததற்கு மணிகண்டன் தான் காரணம் என்பதை அறிந்த சுபாஷ் ஆத்திரம் அடைந்தார்.

இது தொடர்பாக சுபாசுக்கும், மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவத்தன்று சுபாஷ், அவருடைய நண்பர்கள் மனோஜ்குமார், தினேஷ் குமார், வெங்கடேசன், விக்ரமாதித்தன் ஆகியோர், வெள்ளாளப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வரவழைத்து மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் பேளூக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com