திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

ஆசைக்கு இணங்க வற்புறுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயன்ற சுதா.
தீக்குளிக்க முயன்ற சுதா.
Published on

திருப்பூர்:

திருப்பூர் அம்மாபாளையம் 7-வது தெருவை சேர்ந்தவர் சுதா. இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். திடீரென அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் சுதா தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் நடந்த விவரத்தை கேட்டறிந்தனர்.

இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2018ல் நானும் எனது கணவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்தோம். தற்போது நானும் எனது குழந்தைகளும் எனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். அப்போது பழனிகுமார் என்பவர் அறிமுகமானார்.

பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக கூறிய அவர், எனக்கு பாரத் முன்னணியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கினார். பின்னர் நானும் பழனிகுமாரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.

இந்தநிலையில் பழனிகுமார் ஆசைக்கு இணங்க கூறி, தினந்தோறும் எனக்கு மிரட்டல்கள் விடுத்து வருகிறார். இது குறித்து போலீசில் புகார் கொடுக்க முயன்ற போது என்னையும், எனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார். எனவே பழனிகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com