சேலம் அருகே பெண் கொலை- கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கைது
கைது
Published on

சேலம்:

சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி புதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மைலி (வயது 60), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவர் சுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு தனியாக சென்று விட்டார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட மைலி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

இந்த நிலையில் அங்குள்ள ஊத்தோடை பகுதியில் கல்மாவு அரைக்கும் மில் அருகே கரட்டு பகுதியில் மைலி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உடலில் பல பகுதிகளில் காயம் இருந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மைலியின் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்தது. இதனால் அவரை யாரோ அடித்து கொன்றது தெரிய வந்ததால் கொலையாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (52) என்பவருடன் மைலியை பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் குடிபோதையில் திட்டியதால் மைலியை கட்டையால் அடித்ததாகவும், அதில் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது முதல் மனைவிக்கு 2 மகள்களும், 2-வது மனைவிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2 மனைவிகளும் என்னை பிரிந்து சென்று விட்டதால் தனியாக கூலி வேலைக்கு சென்று வந்தேன். அப்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மைலியுடன் பழக்கம் ஏற்பட்டது. மைலிக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்போம், பின்னர் உல்லாசமாக இருப்போம். அதன்படி கடந்த 22-ந் தேதி இரவு எனது வீட்டிற்கு மைலி வந்தார். அப்போது 2 பேரும் உல்லாசமாக இருந்து விட்டு மது குடித்தோம், பின்னர் போதையில் இருந்த மைலி என்னை தரக்குறைவாக திட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த நான் அங்கு கிடந்த கட்டையால் மைலியை அடித்தேன், இதில் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து மைலி ஓடினார். அப்போது நிலை தடுமாறி விழுந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து நான் எதுவும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com