

கச்சிராயப்பாளையம்:
கல்வராயன்மலையில் கரியாலூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் சாலையில் படகு குழாம் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரி செய்து பொழுதை போக்கி மகிழ்கிறார்கள். இதற்காக படகு துறையில் 10 பெடல் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் படகு சவாரி செய்யு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.
படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்துக்கு அடியில் பயணிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தின் மேல் பகுதியில் நின்று செல்பி எடுப்பதோடு், படகுசவாரி செய்பவர்களையும் கண்டு மகிழ்வார்கள்.
ஆனால் இந்த தொங்குபாலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதை சீரமைக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தின் அடியில் பயணிக்கும்போது எங்கே பாலம் தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
சேதமடைந்த தொங்கு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.