

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது30). பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
காய்கறி வியாபாரம் செய்து வந்த முத்துக்குமரனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வெளிநாடு செல்ல முடிவு செய்து ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு கடந்த 4-ந்தேதி சென்றுள்ளார்.
இந்நிலையில் இங்கு சரியான வேலை அமையவில்லை. மீண்டும் ஊருக்கு திரும்பி விடலாமா என யோசிக்கிறேன் என தொலைபேசியில் மனைவி வித்யாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 7-ந்தேதிக்குப்பிறகு முத்துக்குமரனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.
இதற்கிடையே கடந்த 9-ந்தேதி குவைத்தில் முத்துகுமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் கலங்கி போனார்கள்.
இந்த நிலையில் குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டதும், முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒட்டகம் மேய்க்க மறுத்த முத்துகுமரனுக்கும், அவரது முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்ததை அறிந்த குவைத் முதலாளி் அவரை சுட்டுக்கொன்றதாக குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதுபற்றி குவைத் குழுவினர் தீவிர விசாரணை நடத்தியதில் முத்துக்குமரனை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக குவைத்தை சேர்ந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட்டுகளான ஆந்திரா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முத்துக்குமரனின் உடல் நாளை 16-ந்தேதி விமானம் மூலம் குவைத்தில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.
தனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு முத்துக்குமரனின் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மேலும் நாளை முத்துக்குமரனின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள், அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.