3 வயது சிறுமி எரித்துக் கொலையா? தீக்காயத்துடன் மீட்கப்பட்ட வாலிபரிடம் போலீஸ் விசாரணை

சூலூர் அருகே 3 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து தீக்காயத்துடன் மீட்கப்பட்ட வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பலி
சிறுமி பலி
Published on: 

சூலூர்:

சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 34 வயது கூலித்தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று இவரது மனைவி வழக்கம் போல் வேலைக்கும், மூத்த மகள் பள்ளிக்கும் சென்று விட்டனர்.

வீட்டில் கூலித்தொழிலாளியும், அவரது 2-வது மகளான 3 வயது சிறுமி மட்டும் இருந்தனர். மகள் சாப்பிடுவதற்கு ஏதாவது திண்பண்டங்கள் வாங்கி வரலாம் என நினைத்த தொழிலாளி, மகளிடம் நான் கடை வரை சென்று விட்டு வருகிறேன். கவனமாக இரு என கூறி விட்டு சென்றார்.

பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் மகள் திறக்கவில்லை. மேலும் வீட்டிற்குள் இருந்து கருகிய வாடையும் வந்தது.

சந்தேகம் அடைந்த தொழிலாளி, தனது பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் அவரது மகள் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

அருகே வாலிபர் ஒருவரும் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். யார் அவர் என தொழிலாளி அருகே சென்று பார்த்தார். அப்போது அவர் தொழிலாளியின் நண்பர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

மேலும் காயம் அடைந்த நபரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சிறுமி இறப்பிற்கான காரணம் குறித்து தெரிந்து கொள்ள வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருந்ததும், கியாசுக்கு செல்லக்கூடிய பைப் பிடுங்கி கிடந்ததும் தெரியவந்தது.

இதனால் சிறுமியின் வீட்டிற்கு வந்த நபர், சிகரெட் பற்ற வைத்தபோது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது திட்டமிட்டு அந்த நபர் சிறுமியை கொலை செய்தாரா? என்பதும் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் அவர் சிறுமியின் வீட்டிற்கு வந்ததற்கான காரணம் தெரியவில்லை. அவர் எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தீ விபத்தில் காயம் அடைந்த நபர் தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் சிகிச்சை முடிந்து ஒரளவு தேறிய பிறகே அவரிடம் விசாரணை நடத்த முடியும். தற்போது அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கண்விழித்த பிறகே எதற்காக அவர் சிறுமியின் வீட்டிற்கு வந்தார். அதற்கான காரணம் என்ன? என்பதும், இந்த சம்பத்தில் இருக்கும் சந்தேகங்களும் தெரியவரும் என்றனர்.

X