காதலிக்க மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்- ரவுடி கைது

கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவரை காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 21). ரவுடி. இவர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் சுந்தர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது காதலி, தன் காதலன் ஒரு ரவுடி என்பதை கேள்விப்பட்டு, அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த 3 மாதங்களாக எவ்வளவோ முயன்றும் காதலியுடன் சுந்தரால் பேச முடியவில்லையாம். இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் தனது தோழிகளுடன் பாண்டி மெரினா பீச்சுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுந்தர், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என்று கூறி, அவரை கையால் தாக்கினார். மேலும் என்னை காதலிக்கவில்லை என்றால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதில் காயம் அடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி சுந்தரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com