சென்னையில் குடிநீர் சப்ளை குறைப்பு

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி அடுத்த மாதம் முதல் ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரியம்
சென்னை குடிநீர் வாரியம்
Published on

சென்னை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் மொத்தம் 8053 மி.கன அடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக தினசரி 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடிநீர் வினியோகம் 977 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, பல இடங்களில் மெட்ரோ வாட்டார் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் குடிநீர் சப்ளை குறைக்கப்பட்டு உள்ளது. எனினும் 2 நாட்களில் மீண்டும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றார்.

கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி நிலவரப்படி 5 ஏரிகளிலும் 11 ஆயிரத்து 296 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. கடந்த 3 மாதத்தில் 3 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தினசரி 830 மில்லியன் லிட்டர் சப்ளை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி அடுத்த மாதம் முதல் ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பூண்டி ஏரியில் நீர் இருப்பு அதிகரிக்கும்.

ஏற்கனவே ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதாலும், கிருஷ்ணா தண்ணீர் கிடைப்பதாலும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1845 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி ஆகும். தற்போது 307 மி.கன அடி தண்ணீர் இருப்பு இருக்கிறது.

இதே போல் புழல் ஏரியில் 2894 மி.கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி) செம்பரம்பாக்கம் ஏரியில் 2,527 மி.கனஅடியும் (3,645மி.கனஅடி), கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 480 மி.கனஅடியும் (500 மி.கனஅடி) தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com