

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. அது விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நான்காவதாக வாணியம் பாடியில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179 ஏ பணிகளும் நிறைவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஐந்தாவதாக இந்த சாலை தேவையில்லை என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது.
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7, ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். யாரோ சிலர் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. சென்னை - சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட, அதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தமிழக அரசு தான் செய்து கொடுத்தாக வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்தால், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்த முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, தொடக்கத்தில் தடுமாற்றமான நிலைப்பாடுகளை எடுத்தாலும் கூட, பின்னாளில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக தி.மு.க. அறிவித்தது. எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு இப்போது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது?.... மக்களின் பக்கம் நிற்கப் போகிறதா?... மத்திய அரசின் பக்கம் நிற்கப் போகிறதா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். இது குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு உழவர்களின் நலன்களுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்கக் கூடாது. ஒருவேளை மத்திய அரசு அத்திட்டத்தை செயல்படுத்த முனைந்தாலும் அதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... இன்று இரவு தமிழகம் வரும் மத்திய நிபுணர் குழு- 5 நாட்கள் தங்கி இருந்து கண்காணிப்பு