கடலூர் அருகே கூடாரம் அமைத்து பொதுமக்கள் போராட்டம்- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர் அருகே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தனியார் நிலத்தை கையகப்படுத்தி தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.
தீக்குளிக்க முயன்ற பெண்
தீக்குளிக்க முயன்ற பெண்
Published on

கடலூர்:

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

அந்த நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறையினர் கையகப்படுத்தி அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு அந்த தனியார் நிலத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் வசிக்கும் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த தனியார் நிலத்திற்குள் நுழைந்து ஏராளமான கூடாரங்களை அமைத்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். தொடர்ந்து அவர் சற்றும் எதிர்பாராதவிதமாக மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இந்த தனியார் நிலத்தை கையகப்படுத்தி தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என கூறினர். தொடர்ந்து தாசில்தார் பூபால சந்திரன் தலைமயில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் கூட்டத்தில் உள்ள 5 பெண்கள் தங்கள் கைகளில் மண்எண்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் இருப்பதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com