வேலூரில் பரபரப்பு- நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது கைதி தப்பி ஓட்டம்

நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதி தப்பி ஓட்டம்
கைதி தப்பி ஓட்டம்
Published on

வேலூர்:

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் (வயது20). தனியாக செல்பவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தார். இது சம்பந்தமாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சல்மானை பிடித்து கைது செய்தனர்.

அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக டோல்கேட் அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீசாரின் பிடியில் இருந்து சல்மான் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகரில் உள்ள பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நள்ளிரவில் கொணவட்டம் பகுதியில் பதுங்கியிருந்த சல்மானை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மீண்டும் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியது சம்பந்தமாக பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் சல்மான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் நேற்றிரவு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com