தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?- இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை தமிழக மீனவர்களுக்குத் திருப்பி தராமல் தன்வசம் வைத்திருந்த இலங்கை அரசு, 105 படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடப்போவதாக விளம்பரப்படுத்தியிருப்பது கைப்பற்றப்பட்ட படகுகள் திருப்பி கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

ஏற்கெனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல், கொரோனா தொற்று நோய் பாதிப்பு என பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, என்றாவது ஒரு நாள் படகுகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இலங்கை அரசின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பு இயற்கை நியதிக்கு எதிரான செயல். மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசிற்கு எந்த உரிமையும் இல்லை, சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை.

இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போலவும் உள்ளது.

இலங்கை அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இலங்கை அரசின் செயலை மத்திய அரசு தடுக்காவிட்டால் பிப்ரவரி 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலமாக எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கும் உண்டு.

இதுகுறித்து முதல்-அமைச்சர், பிரதமர் மோடிக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளார் என்றாலும், ஏலத்திற்கு இன்னும் பதினைந்து நாட்கள் கூட இல்லாத நிலையில், மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, படகுகள் ஏலம் குறித்த விளம்பரம் இலங்கை அரசால் ரத்து செய்யப்படுவது உறுதி செய்யப்படவும், அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் இலங்கை நாட்டிடம் இருந்து திரும்பப் பெறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com