மேலும் 11 பேருக்கு தொற்று- ஐ.ஐ.டியில் கொரோனா பாதிப்பு 182 ஆக உயர்வு
சென்னை ஐ.ஐ.டியில் திடீரென்று கொரோனா தொற்று வெடித்தது. கடந்த 9ந்தேதி முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு 7,590 பேர் தங்கி உள்ளனர். நேற்று வரை 6,900 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 171 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். ஆரம்பத்தில் கொரோனா தாக்கிய 12 பேர் குணம் அடைந்து விட்டனர். அவர்கள் மேலும் 7 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கொரோனா தாக்கிய மாணவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. அதேபோல் வெளியாட்களும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
நேற்று பரிசோதிக்கப்பட்டவர்களில் மேலும் 11 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
ஐ.ஐ.டி.யில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதுவரை கொரோனா உறுதியானவர்களுக்கு ஒமைக்ரான் பி.ஏ2 வகை வைரஸ் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு வராது என்று மருத்துவ துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ம.தி.மு.க.வில் 3 மாவட்ட செயலாளர்கள் தற்காலிக நீக்கம்- தலைமைக் கழகம் அறிவிப்பு

