மீன் வியாபாரியை நகைக்காக கழுத்தை நெரித்து கொன்ற மர்ம நபர்கள்

விழுப்புரம் அருகே மீன் வியாபாரியை நகைக்காக கழுத்தை நெரித்து கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முத்தம்மாள்
கொலை செய்யப்பட்ட முத்தம்மாள்
Published on

கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே துலுக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு, அவரது மனைவி முத்தம்மாள் (வயது 58). மீன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி மீன் வியாபாரத்துக்கு சென்ற முத்தம்மாள் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் முத்தம்மாளின் மகன் ராஜீவ்காந்தி புகார் செய்தார். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தம்மாளை தேடி வந்தனர்.

நேற்று மாலை பாக்கம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில் மீன் கூடை கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் இதுபற்றி முத்தம்மாளின் மகன் ராஜீவ்காந்திக்கு தெரிவித்தனர். உடனே அவர் கரும்பு தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது மீன்கூடை அருகே முத்தம்மாள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து ராஜீவ் காந்தி கதறி துடித்தார். முத்தம்மாளின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி துப்பு துலக்க விழுப்புரத்திலிருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. இது சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சம்பவத்தில் ஆய்வு செய்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த முத்தம்மாள் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். முத்தம்மாள் எப்பொழுதும் தனது கழுத்தில் 4 பவுன் தங்கச் சங்கிலி அணிந்திருப்பார். அதோடு மீன்விற்ற பணம் வைத்திருப்பார். ‌‌இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்திற்காக முத்தம்மாளை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். முத்தம்மாளை கொன்ற கொலையாளிகள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com