

தஞ்சாவூர்:
தஞ்சையில் கல்லணை கால்வாய் புனரமைக்கும் பணியில் ஆற்றின் தரையில் கான்கிரீட் தளம் எதிர்ப்பை மீறி போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர் . மேலும் பாசன வாய்க்கால் மதகுகள் அளவு குறைவாக போடுவதால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், 750 ஹெக்டேர் பாசன பரப்பளவு கொண்ட வாய்க்காலுக்கு ஒரு அடி குழாய் போடுவதால் 100 ஹெக்டர் கூட சாகுபடி செய்ய முடியாது. ஒருபோக சாகுபடி செய்யக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் இன்று தஞ்சை மானோஜிப்பட்டி கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்காக லாரி வந்தது. இது குறித்து தகவல் அறிந்த கீழ மானோஜிப்பட்டி, வடக்கு மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம், களிமேடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு லாரியை மறித்து பணியை தடுத்தனர். பின்னர் கல்லணை கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதகுகள் அளவு குறைவாக போடுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை குறுவை சாகுபடிக்காக கல்லணை திறக்கப்படும் நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.