நெல்லையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்- டிரைவரை அரிவாளால் வெட்டி விட்டு பஸ்சில் தப்ப முயன்ற கண்டக்டர்

சினிமாவை மிஞ்சும் வகையில் வண்ணார்பேட்டையில் இன்று பிற்பகல் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிடிபட்ட கண்டக்டர் சுபாஷ்
பிடிபட்ட கண்டக்டர் சுபாஷ்
Published on

நெல்லை:

நெல்லை தாழையூத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது24). தனியார் பஸ் கண்டக்டர்.

இவருக்கும் மற்றொரு தனியார் பஸ்சை சேர்ந்த டிரைவர் சங்கர பாண்டி (34), கண்டக்டர் இசக்கி பாண்டி (24) ஆகியோருக்கும் பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுபாஷ் பணியாற்றி வரும் பஸ் நிறுவனத்தினர் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் டிரைவர் சங்கர பாண்டி, கண்டக்டர் இசக்கி பாண்டி ஆகியோர் பணி முடிந்து இன்று வண்ணார்பேட்டையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு அரிவாளுடன் நின்ற சுபாஷ் அவர்களை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

எனினும் அவர்களை விரட்டி சென்ற சுபாஷ் அரிவாளால் வெட்டினார். இதில் சங்கர பாண்டிக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக்கொண்ட இருவரும் சுபாசை பிடிக்க முயன்றனர். இதனால் பயந்த அவர் அவர்களிடம் இருந்து தப்பிக்க அரிவாளுடன் அங்கிருந்து தப்பியோடினார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு பஸ்சில் ஏறி சென்றார். அரிவாளுடன் அவர் பஸ்சில் ஏறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது.

இதனால் அதில் இருந்து இறங்கிய சுபாஷ் அவ்வழியாக சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏற முயன்றார். இதனை பார்த்த அங்கு போக்குவரத்து பணியில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவலர் அருணாசலம் அவரைவிரட்டி சென்று பிடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், பாளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com