காதல் திருமணம் செய்த டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

காதல் திருமணம் செய்த கார் டிரைவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது
கைது
Published on

தென்காசி:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரு நாழிவிலக்கு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30). கார் டிரைவர்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த மாலா (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி தென்காசிக்கு சென்ற அரவிந்த் கொலை செய்யப்பட்டு கல்குவாரியில் வீசப்பட்டார்.

இது தொடர்பாக தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கீழப்புலியூரை சேர்ந்த பொன்னரசு, தம்புரான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கொலை தொடர்பாக சீதாராமன், மணிகண்டன் ஆகியோர் சங்கரன்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரவிந்த் வேலைக்கு செல்லாமல் மாலாவை துன்புறுத்தி வந்ததால் மாலாவின் தாய் பொன்ராணி என்பவர் உறவினர் வசந்த் என்பவர் மூலம் கூலிப்படையை ஏவி அரவிந்தை கொலை செய்ததும், இதற்காக அவர் ரூ. 4 லட்சம் கொடுத்தும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பொன் ராணியை கைது செய்த போலீசார் வசந்தை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவு கீழப்பூலியூரில் பதுங்கி இருந்த வசந்தை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்த சீதாராமன், மணிகண்டன் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இன்று அல்லது நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com