அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆவணங்கள் மாயம்- ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குகள் பாய்கிறது

ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள். ஆலோசனைக்கு பிறகு உயர் அதிகாரிகள் அறிவுரைக்கு ஏற்ப போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆவணங்கள் மாயம்- ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குகள் பாய்கிறது
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தபோது அதே நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

தலைமை கழக கதவை ஆதரவாளர்களுடன் உடைத்துக்கொண்டு அவர் சென்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தலைமை கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கிடையே கோர்ட்டு உத்தரவின் காரணமாக தலைமை கழகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் சென்று அ.தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் மாயமாகி இருந்தன. பொருட்கள், பீரோக்கள், கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. ஆவணங்களையும், பொருட்களையும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வந்தவர்கள் எடுத்து சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலக அசல் பத்திரம் மற்றும் பல ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வந்தவர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் ஆவணங்கள் மாயமாகி இருப்பதை வீடியோ ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார்.

மேலும் சீல் அகற்றப்பட்ட பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வழங்கியுள்ளார். இதைத் தவிர அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் கொடுத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் மனு மீது ராயப்பேட்டை போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை கழகம் தாக்கப்பட்டது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது, 'பூட்டி இருக்கும் அலுவலகத்துக்குள் நீங்கள் எப்படி உள்ளே செல்லலாம்' என்று நீதிபதி கேட்டிருந்தார்.

எனவே தலைமை கழகம் சூறையாடப்பட்டது தொடர்பாக வந்துள்ள புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யவேண்டிய நிர்பந்தம் ராயப்பேட்டை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனைக்கு பிறகு உயர் அதிகாரிகள் அறிவுரைக்கு ஏற்ப போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது பற்றி போலீசார் கூறுகையில், 'நிச்சயம் வழக்குப்பதிவு செய்யப்படும்' என்று தெரிவித்தனர்.

வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினாலும், எத்தகைய பிரிவுகளில், எத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பொறுத்தவரை சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல், திருடுதல், ஆவணங்களை கொள்ளை அடித்தல், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், வாகனங்களை அடித்து நொறுக்குதல் உள்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

ஆனால் 10 பிரிவுகளில் ஓ.பன்னீர் செல்வம் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்வார்களா? என்று தெரியவில்லை. போலீசார் உரிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யாவிட்டால் இதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெரிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது வழக்குகள் பதிவு செய்தாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் சென்ற சில மூத்த தலைவர்கள் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு போலீசார் பதில் அளிக்கவில்லை. என்றாலும், கலவரத்தில் ஈடுபட்ட பலர் சி.சி.டி.வி. கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் முதலில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஓரிரு நாட்களில் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com