

சேலம்:
சேலம் அரியானூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 85), விவசாயி. இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
மனைவி இறந்து விட்ட நிலையில் கந்தசாமி விவசாய கூலி வேலை செய்வதில் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணிஅளவில் வீட்டிற்குள் கந்தசாமி திடீரென தலையில் மண்எண்ணை ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து தீ அணையாமல் வீட்டிலும் இருந்த துணிகளிலும் பிடித்து கொண்டது. இதனால் வீட்டிற்குள் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார், கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கந்தசாமிக்கு கடன் தொல்லை இருந்ததா? அல்லது நோய் கொடூரம் இருந்ததா? அல்லது தந்தைக்கும், மகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.