

திருப்பூர்:
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒவ்வொரு மாதமும் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு மற்றும் கடந்த ஆண்டில் இருந்து தற்போது நடந்த ஏற்றுமதி வர்த்தகத்தின் அளவு குறித்து அறிவிக்கப்படும்.
அதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்திய அளவிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடியே 62 லட்சத்துக்கு நடந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.7 ஆயிரத்து 987 கோடியே 32 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாத வர்த்தகம் 22.71 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் முறையே 10 சதவீதம், 13 சதவீதம் குறைந்து இருந்த நிலையில் கடந்த மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் அதிகரித்துள்ளது.
ஆனால் திருப்பூரில் ஆயத்த ஆடை உற்பத்தி இன்னும் மந்தகதியில் உள்ளது. முழுவீச்சில் நடைபெறும்போது இந்திய ஏற்றுமதி வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.