மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம்- நேரத்தோடு ஆசிரியர்கள் வருவதில்லை என புகார்

அரசு பள்ளி கதவு திறக்கப்படாததால் மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளியை பொறுத்தவரை வழக்கமாக 8.30 மணியளவில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் பாகூர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி 9 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. மேலும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 9.30 மணிக்கு மேல் பள்ளிக்கு வருவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று பாகூர் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி கதவு 9.30 மணி வரையும் திறக்கப்படவில்லை ஆனால் பள்ளிக்கு வந்த மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளியின் கதவு திறக்கபடாததால் நீண்ட நேரம் காத்து கிடந்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் ஆசிரியர் வந்தவுடன் பள்ளி வாசல் கதவு திறக்கப்பட்டு பள்ளி மாணவர்களை உள்ளே அனுமதித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நாள்தோறும் பள்ளி கதவுகள் தாமதமாகவே திறக்கப்படுகின்றன ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆசிரியர்களும் தகுந்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. உள்ளூரில் பணியாற்றுவதால் 9.30 மணிக்கு மேல் பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த சாலையில் பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கார்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை போலீசார் சரி செய்ய வேண்டும்.இது சம்பந்தமாக அரசு உடனே கவனம் செலுத்தி மாணவர்களின் உயிரை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com