பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

தைமாதம் சனி பிரதோஷத்தையொட்டி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் தைமாத  சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தைமாத சனிபிரதோஷத்தையொட்டி எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அதேபோல் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தைமாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

இதேபோன்று  பரமத்தி வேலூர் அருகே பாலபட்டி சங்கமேஸ்வரருக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தன காப்பில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com