ஜெயில் கைதிக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

மதுரையில் ஜெயில் கைதிக்கு போதை மாத்திரை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

மதுரை

மதுரை மத்திய ஜெயிலில் கஞ்சா உபயோகம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

எனவே மதுரையில் மத்திய ஜெயில் கைதிகள் விவகாரத்தில் உஷாராக நடந்து கொள்ள வேண்டும்  என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் உத்தரவின்படி இன்ஸ்பெ க்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது மதுரை மாவட்ட நீதிமன்ற நுழை வாயிலில் ஜெயில் கைதி ஒருவருக்கு வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் கொடுப்பதாக ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில் ஜெயில் கைதிக்கு போதை மாத்திரை கொடுத்ததாக 18 வயதுடைய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை போலீசார் அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

இதில் அவர் மேலப் பொன்னகரம் 2வது தெருவை சேர்ந்த அண்ணா துரை மகன் சிந்தனை செல்வன் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை கோமஸ் பாளையத்தை சேர்ந்த முனியாண்டி மகன் மாரிமுத்து என்ற சிவா (வயது 21). இவர் மீது கரிமேடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு அவர் கடந்த சில மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்தநிலையில் மாரிமுத்து என்ற சிவாவை போலீசார் நேற்று வழக்கு விசாரணைக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்றம் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த சிந்தனைச் செல்வன், போலீசுக்கு தெரியாமல் மாரிமுத்துவிடம் போதை மாத்திரைகளை கொடுத்து உள்ளார். 

இதனை தற்செயலாக கவனித்த போலீசார் உடனடியாக அவரை கையும் களவுமாக பிடித்தது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் கைதிக்கு போதை மாத்திரைகளை கொடுத்ததாக, சிந்தனை செல்வனை அண்ணா நகர் போலீசார் கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com