

திருமங்கலம்
மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி திருமங்கலத்தில் இன்று காலை நடந்தது. அங்குள்ள சோழவந்தான் ரோட்டில் இருந்து செக்கானூரணி காவல் நிலையம் வரை இந்த போட்டி நடந்தது.
இதில் வீரர்-வீராங்கனைகள், காவல்துறையினர், மாணவ-மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில் 12 கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஓடினர். அவர்களுக்கு ஆங்காங்கே காவல்துறை சார்பில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்று முதல் 3 இடத்தை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.