

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் திருவள்ளுவருக்கு வான் முட்டும் அளவுக்கு 133 அடி உயரத்தில் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலையை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 22 ஆண்டுகள் ஆகிறது.
3 ஆயிரத்து 681 வடிவமைக்கப்பட்ட கருங்கற்களை கொண்டு இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 90 ஆயிரம் கனஅடி எடை கொண்ட இந்த சிலை கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட ஆழிப் பேரலை என்ற சுனாமியின் போது கூட சிறிதளவும் அசையவில்லை.
அப்படிப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள இந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவிய முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது 99-வது பிறந்த நாள் விழாவையொட்டி திருவள்ளுவர் சிலை பல வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
இரவு நேரத்தில் இந்த கண்கொள்ளா காட்சியை காண கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடற்கரையில் நின்றவாறு சுற்றுலா பயணிகள் தங்களது கேமரா மற்றும் செல்போன்களில் புகைப்படம் எடுத்ததோடு மட்டுமின்றி செல்பியும் எடுத்த வண்ணமாக உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பொதுப்பணித்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செய்து உள்ளன.