

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நேற்று மதுபோதையில் லாரியை டிரைவர் தாறு மாறாக ஓட்டி சென்றதில் நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி மூட்டைகள் நடுரோட்டில் நெடுந் தூரத்திற்கு விழுந்து சென்றதைக் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக அரசு வாணிப கழகம் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்குவதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டது.
இங்கிருந்து லாரிகள் மூலம் தனியார் ஒப்பந்ததாரர் அரவை மில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அரவை மில்லில் இருந்து அரைக்கப்பட்ட அரிசிகளை தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் இடங்களுக்கு கொண்டு சென்று சேமித்து வைக்கப்படுகிறது.
அங்கிருந்து நியாயவிலை கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று தருமபுரி தனியார் அரவை மில்லில் இருந்து அரவை செய்யப்பட்ட ரேஷன் அரிசிகளை பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடத்தூர் வாணிபகழகம் கிடங்கிற்கு லாரி மூலம் நுகர்பொருள் வாணிப கழகம் அரிசி அனுப்பப்பட்டது.
அந்த அரிசி மூட்டையை எடுத்து சென்ற போது லாரி டிரைவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்ற போது டிரைவர் கவனக் குறைவாக ஓட்டியதால் அரிசி மூட்டைகள் நடுரோட்டில் விழுந்தும், அரிசி நெடுந் தூரத்திற்கு தார் சாலை முழுவதும் அரிசி சிதறியது.
இதனை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் உடனே லாரியை நிறுத்தி டிரைவரிடம் கூறினர். சாலையில் அரிசி மூட்டைகள் சிதறியதை கண்டு டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழகத்தினர் மாற்று லாரியில் அரிசி மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.