search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி  அதிகாரிகள் வாகனம் முற்றுகை- வாக்குவாதம்
    X

    கடலூர் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி வாகனத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

    பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகள் வாகனம் முற்றுகை- வாக்குவாதம்

    • மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
    • நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியபகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களுடன்2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம். இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது. எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×