பிபின் ராவத் மறைவு - தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை

குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதற்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிபின் ராவத் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.  தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த செய்தி கேட்டு  அதிர்ச்சி அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குன்னூர் அருகே நடந்த  ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின்  முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் 11 ஆயுதப்படை வீரர்கள் உயிரிழந்ததற்கு மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதேபோல் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடிப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா , பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் வி.கே.சசிகலா உள்பட பலர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com