search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தேர்தல் களத்தில் இருந்து பின் வாங்கும் மக்கள் நீதி மய்யம்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
    சென்னை :

    நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரி மாதம் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலை ‘மக்கள் நீதி மய்யம்’ சந்தித்தது.

    பாராளுமன்ற தேர்தலில் 36 தொகுதிகளிலும், அதனுடன் சேர்த்து நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தனியாக நடத்தப்பட்ட திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை கமல்ஹாசன் நிறுத்தினார். ‘டார்ச் லைட்’ சின்னத்துடன் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட அக்கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    பாராளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அக்கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. சுமார் 3.72 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இது கமலுக்கு மட்டுமின்றி அக்கட்சி தொண்டர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    இந்த தோல்வியின் எதிரொலியாக கடந்த மாதம் நடந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலை சந்திக்காமல் மக்கள் நீதி மய்யம் பின்வாங்கியது. அதன்பின்பு சினிமா படப்பிடிப்பிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்திய கமல்ஹாசன், சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி, கமல்ஹாசன்

    பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021-ல் ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

    நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன், ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த இடைதேர்தலிலாவது கமல்ஹாசன் நல்ல முடிவு எடுப்பார்? என நம்பிக்கையுடன் காத்திருந்த கட்சியின் தொண்டர்களுக்கு அவர் மீண்டும் ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளார்.

    ‘மக்களை நம்பித்தான் கட்சி ஆரம்பித்து உள்ளோம்’ என அடிக்கடி கூறி வரும் கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ தொடர்ந்து இடைத்தேர்தலை சந்திக்காமல் பின்வாங்கி வருவது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×