கருணாஸ், தமிமுன் அன்சாரிக்கும் நோட்டீசு அனுப்புவார்கள்- டி.டி.வி.தினகரன் பேட்டி

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் கருணாஸ், தமிமுன் அன்சாரிக்கும் நோட்டீசு அனுப்புவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #Karunas #3mlas
கருணாஸ், தமிமுன் அன்சாரிக்கும் நோட்டீசு அனுப்புவார்கள்- டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை சில மேதாவிகள் பழனிசாமியின் ராஜதந்திரம் என்கின்றனர். ஆனால் அது ராஜதந்திரம் அல்ல, பயத்தினால் முதல்- அமைச்சர் ஒருவர் அது போன்ற நடவடிக்கை எடுக்கிறார் என்றால் அதை விட வெட்கக்கேடான வி‌ஷயம் எந்த நாட்டிலும் நடந்தது கிடையாது.

இதை சிலர் ராஜதந்திர நடவடிக்கை என்கின்றனர். முள்ளை முள்ளால் எடுப்பது எங்களுக்கு தெரியும்.

3 பேரும் அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள். கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் என்ன சொல்லியுள்ளார் என்பதை நோட்டீஸ் அனுப்பியது பழனிசாமியின் ராஜ தந்திரம் என்று சொல்லும் அதிமேதாவிகளை படிக்கச் சொல்லுங்கள்.

அ.தி.மு.க. வின் ஓர் அணி தான் இவர்கள் உச்சநீதி மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை இவர்களுக்கு போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அதுவரை இவர்கள் அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள்தான் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா இரட்டை இலை சின்னம் தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளார். அ.தி.மு.க. அம்மா அணியாக அவர் செயல்படுகிறார். 3 பேரும் அ.தி.முக. உறுப்பினர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தோற்று விடுவோம் என்று தெரிந்து கொண்டு பயத்தினால்தான் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பிறகு தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினாலும் அனுப்புவார்கள். நீங்கள் சொல்வதுபோல பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொன்னாலும் சொல்வார்கள்.

3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறானது.

நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்பே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் என்று பயமுறுத்தி விரைவாக 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்று ஸ்டாலின் சொல்கிறார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளாமல் தினகரனும், ஸ்டாலினும் கூட்டணி என்கிறீர்கள். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்பது பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும் நன்றாக தெரியும். பயத்தின் வெளிப்பாடுதான் ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள்.

ஒரு கட்சி மக்களை சந்தித்து வெற்றி பெறுவதைதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்னொரு கட்சியை மிரட்டி, உருட்டி கையில் வைத்துக் கொள்வது என்பது அரசியலில் சரியான போக்கு அல்ல.

திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவின் கட்டுப் பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். இன்னொரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று சொல்வது தவறான போக்கு. கேட்டால் ராஜதந்திரம் என்பார்கள். ஆனால் அது சந்தர்ப்பவாதம். மே 23-ந்தேதி இதுபோன்ற மக்கள் விரோத ஆட்சிக்கெல்லாம் பொதுமக்கள் முடிவு கட்டி விடுவார்கள்.

சி.வி.சண்முகம் டெல்லியில் நிதானமாக பேசியதை பற்றி யெல்லாம் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீர்கள். அமைச்சராக இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்று இருக்கிறதா என்ன? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

எங்கள் கட்சி சார்பில் அம்மாவின் உருவப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று சி.வி.சண்முகம் சொல்கிறார். அதுபோன்று அம்மா, தலைவரின் படத்தை பயன் படுத்தக் கூடாது என்று சொல்கிற உரிமை யாருக்கும் கிடையாது.

கரைவேட்டியை உபயோகப்படுத்துகிறோம் என்கிறார். கரைவேட்டி எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. கொடியில் கருப்பு, சிவப்பு நிறத்தில் நடுவில் வெள்ளை நிறத்தில் இடுப்பளவு அண்ணாவின் திருவுருவப்படம் இருக்கும். ஆனால் அம்மா முன்னேற்றக்கழக கொடியில் நடுவில் 50 சதவீதம் வெள்ளையும், மேலே 25 சதவீதம் கருப்பும், கீழே 25 சதவீதம் சிவப்பும் நடுவில் அம்மாவின் கம்பீரமான படம் இருக்கும். அம்மாவின் படத்தை உபயோகப்படுத்தக் கூடாது என்று யார் சொன்னாலும் தவறுதான்.

இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #Karunas #3mlas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com