எடப்பாடி அணிக்கு எதிராக போட்டி பொதுக்குழு: டி.வி.வி. தினகரன் அதிரடி திட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை நீக்கியுள்ள டி.வி.வி. தினகரன் போட்டி பொதுக்குழு ஒன்றை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி அணிக்கு எதிராக போட்டி பொதுக்குழு: டி.வி.வி. தினகரன் அதிரடி திட்டம்
Published on

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியையும் கட்சியையும் அவரது தோழி சசிகலா முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

முதலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற சசிகலா பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் பதவியில் அமர திட்டமிட்டார். அந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 12 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள் மட்டுமே எதிர்ப்பாளர்களாக இருந்ததால் சசிகலாவுக்கு அது ஒரு பெரிய தடையாக இருக்கவில்லை.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் சசிகலாவின் ஆசை, கனவு, திட்டம் அனைத்தும் தவிடு பொடியானது. என்றாலும் அ.தி.மு.க. தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்த சசிகலா, தன் உறவினர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வானார்.

முதலில் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தினகரனை அனுசரித்து செயல்பட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்ட போது எல்லா அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் ஓ.பி.எஸ். அணி எதிர்ப்பால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு தினகரனுக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே தினகரனை ஓரம் கட்டி விட்டு அ.தி.மு.க. அம்மா அணியை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தினார்.

தினகரனை ஏற்கனவே ஓ.பி.எஸ். அணியினர் எதிர்த்து வந்தனர். இதன் காரணமாக ஓ.பி.எஸ். அணியும் எடப்பாடி அணியும் நெருங்கியது. கடந்த மாதம் அ.தி.மு.க. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த 12-ந்தேதி அ.தி.மு.க. அம்மா அணி, அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 2,300 உறுப்பினர்களில் 2128 பேர் கலந்து கொண்டனர். 95 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக திரண்டதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்தார்.

அ.தி.மு.க. ஆட்சியையும் கட்சியையும் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், அவரால் நியமனம் செய்யப்பட்ட தினகரன் உள்ளிட்ட அனைவரையும் நீக்கி தீர்மானம் கொண்டு வந்தனர்.

சசிகலா வெளியிட்ட உத்தரவுகள் அனைத்தும் செல்லாது என்றும் அறிவித்தனர்.

அது மட்டுமின்றி அ.தி.மு.க.வை வழி நடத்த புதிய ஒருங்கிணைப்பாளர் (ஓ.பி.எஸ்.) தலைமையில் 15 பேர் குழு உருவாக்கவும் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்காக அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது. அதைக் கொண்டு புதிய பிரமாண பத்திரங்கள் தயாரிக்கப்பட்டன.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் டெல்லி சென்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை தலைமை தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தனர். அதில் அவர்கள், சசிகலாவை நீக்கி விட்டதாகவும், எனவே அ.தி.மு.க. கட்சிப் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரன் அணியினர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து இரு தரப்பினரும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வரும் 29-ந்தேதிக்குள் ஆவணங்கள், பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்த கால அவகாசம் இன்னும் 2 நாட்களில் முடிய உள்ளது.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்கனவே பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ள போதிலும், மீண்டும் ஒவ்வொரு பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களிடமும் தனி தனியாக கையெழுத்துப் பெற்று ஆவணங்களை தயாரித்து வருகிறது. அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்கள் வசம் உள்ள நிலையில் இந்த பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தினகரன் வசம் 21 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். ஆனால் பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களில் 5 சதவீதம் பேர் ஆதரவு கூட இல்லை. இது அவருக்கு சவாலாக உள்ளது.

இந்த சவாலை எதிர்கொள்ள தனது ஆதரவாளர்களை கொண்டு புதிய பொதுக்குழு - செயற்குழுவை உருவாக்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் ஈடுபட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் கடந்த சில மாதங்களாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். பெரும்பாலான மாவட்ட செயலாளர்களை மாற்றி விட்டு தனக்கு விசுவாசமானவர்களை புதிய மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்துள்ளார்.

தற்போது அவர் தமிழகம் முழுவதும் நகரச் செயலாளர்களையும், ஒன்றிய செயலாளர்களையும் மாற்றி விட்டு தனது ஆதரவாளர்களை நியமனம் செய்து வருகிறார். இந்த நியமனங்கள் மூலம் புதிய பொதுக்குழு - செயற்குழுவை உருவாக்கும் வாய்ப்பு டி.டி.வி. தினகரனுக்கு கிடைத்துள்ளது.

மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்கள்தான் பொதுக்குழு - செயற்குழுவில் இடம் பெற முடியும். இந்த அடிப்படையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மூலம் டி.டி.வி.தினகரனின் புதிய பொதுக்குழு - செயற்குழு தயாராகி வருகிறது.

இவர்களிடம் பிரமாண பத்திரங்களில் தனி தனியாக கையெழுத்துப் பெற்று பட்டியல் தயாரிக்க உள்ளனர். அந்த பட்டியல் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க டி.டி.வி.தினகரன் தரப்பினர் தயாராகி வருகிறார்கள். இந்த பிரமாண பத்திரங்களை அடிப்படையாக வைத்து, அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தரப்பினர் கோரிக்கை விடுக்க உள்ளனர்.

இதையடுத்து 29-ந் தேதிக்குப் பிறகு தலைமை தேர்தல் கமிஷன் இரு தரப்பினரின் பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தீர்ப்பை அறிவிக்கும். இந்த தீர்ப்பு அ.தி.மு.க.வின் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்யும் என்பதால் தேர்தல் கமிஷன் முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த நிலையில் தலைமை தேர்தல் கமிஷன் தன்னிடம் வரும் பிரமாண பத்திரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மையான அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு எந்த அணியிடம் உள்ளது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இதில் தேர்தல் கமிஷன் எந்த விதியை ஏற்று செயல்படும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

டி.டி.வி.தினகரன் தரப்பினர் இதுபற்றி கூறுகையில், “அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அவர் இல்லாதபட்சத்தில் துணை பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் உள்ளது.

அந்த அதிகார சட்ட விதிப்படிதான் புதிய பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.டி.வி.தினகரனுக்கே கட்சியும், இரட்டை இலையும் கிடைக்கும்” என்கிறார்கள்.

இதை எடப்பாடி பழனிசாமி அணியினர் நிராகரிக்கிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், “அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் இல்லாத பட்சத்தில் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டாலே பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தை கூட்ட முடியும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், 5-ல் 1 பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தை நடத்தினார்கள்.

மேலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிலும் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியிடம்தான் உள்ளனர். எனவே கட்சியும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி அணிக்கே கிடைக்கும்” என்றனர்.

இதனால் கட்சியை கைப்பற்றும் போட்டியில் வெற்றி பெறப் போவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது டி.டி.வி.தினகரனா? என்ற விறுவிறுப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com