

டி.டி.வி. தினகரன் இன்று சட்டசபைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு விஷன் 2023-ஐ செயல்படுத்துவோம் என்கிறார்கள். அரசு எந்திரமே செயல்படாமல் உள்ளது. எந்திரமே செயல்படாமல் இருக்கும்போது அவர்கள் விஷனை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்று தெரியவில்லை.
டெல்டா பகுதியை பெரிதும் பாதிக்கிற மீத்தேன் திட்டத்தை தடை செய்வது பற்றியோ, அந்த விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ எந்தவித அம்சமும் இல்லை.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளிலும் அதன் உதிரி பாகங்கள் தரம் சரியில்லை என்பதால் இதுவரை 40 முறைக்கு மேல் பழுதாகி உள்ளது. அந்த மக்களின் பாதுகாப்பு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான முயற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை தேடிக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்கள். இதுவரை சரியாக தேடப்படவில்லை என்பது தான் மக்களின் குறைபாடு.
கடலூர் அருகே தேவனாம்பட்டினத்தில் 22 மீனவர்களை காணவில்லை. அதுபற்றி எந்தவித முயற்சியும் இல்லை. ஒக்கி புயல் பாதித்த பகுதியை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதை பற்றி எந்த வலியுறுத்தலும் இல்லை.
பெண்கள், முதியோர் மேம்பாட்டுக்காக அரசாங்கம் செயல்படுவதாக சொல்கிறார்கள். ஆர்.கே.நகர் போல தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் முதியோர் உதவிப் பணமும் சரியாக வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடத்துகிறார்கள். அதைப்பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை. வீட்டுக்கு ஒரு கழிப்பறை என்கிற திட்டத்தை பற்றி ஏதும் கூறப்படவில்லை.
மத்திய அரசு உதவி பெறும் திட்டங்களில் தமிழக அரசின் பங்கை அதிகமாக்கியதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க 14வது நிலைக்குழுவில் ‘‘இந்த ஆண்டு 2000 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து பெறுவோம் என்று கூறி இருக்கிறார்கள். அதைப்பற்றி எதுவும் இல்லை.
13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் 100 மெகாவாட் உற்பத்தியை கூட அதிகப்படுத்தியதாக தெரியவில்லை. நிர்மாணிக்கிறோம், திட்டமிடுகிறோம் என்று தான் கூறுகிறார்கள்.
அம்மாவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டத்தையே இன்னும் அறிவிக்கவில்லை. அதுவே இன்னும் பேப்பர் நிலையிலேயே இருக்கும்போது அதன் உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தியதாக கூறிஇருப்பது கண்துடைப்பாகும். இத்திட்டத்தையே இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
மத்திய அரசு உதவி பெறும் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்களிப்பை 60 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்த்தி பெறுவோம் என்று கேட்டார்கள். அதை பற்றி எதுவும் இல்லை.
எனக்கு தெரிந்தவரை 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இந்த ஆட்சிக்கு உள்ளது. முதல்-அமைச்சரை கூப்பிட்டு மெஜாரிட்டி இருக்கிறதா என்று கேட்கக்கூடிய இடத்தில் உள்ள கவர்னர் இந்த அரசை அங்கீகரிப்பது போல் சட்டசபையில் உரையாற்றியதே தவறு. இதுமுதல் கூட்டம் என்பதால் நான் முழுமையாக கலந்து கொண்டேன்.
கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை பார்த்தால் நாங்கள் எதிர்க்கிறோம், நம்புகிறோம் என்ற வாசகம் தான் உள்ளது. இதை பார்க்கும் போது முதல்-அமைச்சருக்கே இந்த ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை இல்லை என்று தான் தெரிகிறது. இவர்கள் சட்டசபையில் சும்மா வேண்டுமானால் மேஜையை தட்டலாம். ஆனால் அவர்களே பயத்தை போக்கிக் கொள்ளத்தான் இவ்வாறு செய்வதாக தெரிகிறது.
இந்த அரசு நீடிக்கப்போவதில்லை. மத்திய அரசை பார்த்தாலே நடுங்கும் இவர்கள் எப்படி மத்திய அரசிடம் நிதி கேட்பார்கள். மத்திய அரசுக்கு பயந்து கொண்டு இருக்கும் அரசு தான் இது.
சட்டசபையில் ஆளுனர் உரை என்பது கண் துடைப்பு, சடங்கு, சம்பிரதாயம். இந்த ஆட்சியில் ரேஷனில் வழங்கப்படும் அரிசியையும், நிறுத்தப் போவதாக மக்கள் பயப்படுகிறார்கள்.
சட்டசபையில் இருக்கும் போது என்னைப் பார்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிறையபேர் குனிந்து கொண்டே சிரித்தனர். எனக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் நான் உட்கார்ந்திருப்பது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றாக தெரிந்தது. அவர்கள் என்னைப் பார்த்து மறைமுகமாக அர்த்தமான வகையில் புன்னகை செய்தனர். அமைச்சர்களும் சிலர் குனிந்தபடி புன்னகைத்தனர்.
இந்த அரசு நித்திய கண்டம் பூரண ஆயுசு. இந்த அரசின் காலம் டேபைடே குறைகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க இவர்களை நம்பி வெளிநாட்டினர் எப்படி வருவார்கள். இந்த ஆட்சி கோமாளி ஆட்சி என்பது தெரியும். சிங்கம் இருக்கும் இடத்தில் நரி இருந்தால் எப்படி இருக்கும். சட்டசபையில் பேசுவதற்கு சபாநாயகரிடம் நான் அனுமதி கேட்பேன். அதற்கு முயற்சி செய்வேன்.
இந்த ஆட்சியை நாங்கள் அமைத்து கொடுத்தோம். ஆனால் இப்போது மைனாரிட்டி ஆட்சியாகத் தான் உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டாலும் வெளியே உள்ள வராண்டாவுக்கும் வரக்கூடாது என்று சொல்வது தவறு.
இவர்களுக்கு ராயப்பேட்டை தலைமைக் கழகமாக தெரியவில்லை. மயிலாப்பூரில் இருந்து உத்தரவு வந்தால் தான் இவர்கள் செய்வார்கள் போல் தெரிகிறது.
தி.மு.க.வுடன் கள்ள உறவு இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். எனக்கு யாருடனும் நல்ல உறவு தான் வைக்க முடியும். நான் சட்டசபைக்கு வரக்கூடாது என்ற நினைப்பில் இருந்தனர். ஆனால் ஆர்.கே.நகர் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர்.