குடிபோதையில் வந்த வாலிபர்கள் மோதியதில் மொபட்டில் இருந்து தவறிவிழுந்த பெண் டாக்டர் லாரி ஏறி பலி

தாராபுரத்தில் குடிபோதையில் வந்த வாலிபர்கள் மோதியதில் மொபட்டில் இருந்து தவறிவிழுந்த பெண் டாக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
விபத்து
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மனைவி குப்பாத்தாள். இவரது மகள் லாவண்யா(வயது 24). பல் டாக்டர்.

இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக இவர் தினமும் தாராபுரம் சத்திரம் பஸ்நிறுத்தத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று வந்தார். இவரை இவரது தந்தை பழனிசாமி தினமும் பஸ்சுக்கு தனது மொபட்டில் அழைத்து சென்று வந்தார்.

நேற்று இரவும் வழக்கம்போல் வேலை முடிந்து டாக்டர் லாவண்யா பொள்ளாச்சியில் இருந்து தாராபுரத்துக்கு பஸ்சில் வந்தார். பஸ் சத்திரம் பஸ்நிறுத்தத்தில் வந்ததும் கீழே இறங்கிய லாவண்யா தனது தந்தை பழனிசாமியுடன் இரவு 8.50 மணிக்கு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.

இவர்கள் சிறிதுதூரம் சென்றபோது எதிரே குடிபோதையில் 2 வாலிபர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தனர். கண்இமைக்கும் நேரத்தில் இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பழனிசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. மோதிய வேகத்தில் டாக்டர் லாவண்யா உள்பட 4 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது குடிபோதை வாலிபர்கள் மற்றும் பழனிசாமி ஆகியோர் சுதாரித்து எழுந்தனர். டாக்டர் லாவண்யா ரோட்டில் இருந்து எழுவதற்குள் அந்த வழியாக வந்த லாரி லாவண்யாவின் தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தனது கண்முன்னே மகள் பலியானதை கண்டு அவரது தந்தை பழனிசாமி கதறி துடித்தார். பின்னர் இதுகுறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விபத்தில் பலியான டாக்டர் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் வந்த வாலிபர்கள் குறித்து விசாரித்தபோது அவர்கள் ரெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், கோவிந்தாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் விபத்தில் காயம் அடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. விபத்துக்கு காரணமான அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கோவையில் கடந்த மாதம் 24-ந்தேதி ஆனைகட்டியை சேர்ந்த டாக்டர் ரமேஷ் என்பவர் தனது மனைவி ஷோபனாவுடன் பள்ளிக்கு சென்ற மகளை அழைத்து வர மொபட்டில் சென்றார். அப்போது குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் இவர்கள் மீது மோதியதில் ஷோபனா தலையில் காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com