கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த செம்மரங்களை கண்டுபிடித்த துப்பறியும் நாய்

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள், கார் ஆகியவற்றை கண்டுபிடித்த துப்பறியும் நாய் ஜிட்டுவையும், போலீசாரையும் ஐ.ஜி.காந்தாராவ் பாராட்டினார்.
கடத்தல் கும்பல் பதுக்கி வைத்திருந்த செம்மரங்களை கண்டுபிடித்த துப்பறியும் நாய்
Published on

திருமலை:

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுகின்றன. செம்மரக்கடத்தலை தடுக்கும் பணியில் அதிரடிப்படையினரும், செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவினரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டனர். எனினும், அந்த முயற்சியை நடைமுறைபடுத்தவில்லை.

எனவே சித்தூர், கடப்பா மாவட்டங்களில் சேஷாசலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக்கடத்தலை தடுக்க ஐதராபாத்தில் இருந்து துப்பறியும் நாய்கள் கொண்டு வரப்பட்டன. அந்தத் துப்பறியும் நாய்களுக்கு திருப்பதியில் தீவிர பயிற்சிகள் கொடுத்து, சேஷாசலம் வனப்பகுதிகளில் செம்மரக்கடத்தலை தடுக்கும் பணியில் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில், போலீசார் திருப்பதியை அடுத்த காலூர் கிராஸ் முதல் மங்காபுரம் வரை சேஷாசலம் வனப்பகுதியில் துப்பறியும் நாய்களுடன் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் ஓரிடத்தில் ஒரு டன் செம்மரக்கட்டைகளை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததையும், அங்கிருந்து சிறிது தூரத்தில் கடத்தலுக்கு பயன்படுத்த நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரையும் துப்பறியும் நாய் ‘ஜிட்டு’ கண்டு பிடித்தது. அந்த நேரத்தில் வனப்பகுதியில் போலீசார் வருவதை பார்த்ததும், செம்மரக்கடத்தல் கும்பல் தப்பி ஓடி விட்டனர். ஒரு டன் செம்மரக்கட்டைகள், காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள், கார் ஆகியவற்றை கண்டுபிடித்த துப்பறியும் நாய் ஜிட்டுவையும், செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரையும் போலீஸ் ஐ.ஜி.காந்தாராவ் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com