

கோவை:
கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 4 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவை புலியகுளம் கருப்பராயன்கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகள் ஹேமவர்த்தினி (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ஹேமவர்த்தினி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹேமவர்த்தினிக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமானது. இதனால் பயந்த அவரது பெற்றோர் அவரை மற்றொரு தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் ஹேமவர்த்தினியின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
எனவே அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஹேமவர்த்தினி இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் 20 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 143 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.