100 ஆண்டுகளில் நிகழாத சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது வருத்தத்திற்கு உரியது : பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்

கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Published on

கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, முட்டம், தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று இருந்தனர். அவர்களில் பலர் கரைக்கு திரும்பிவிட்ட நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு வருகை தந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர், கன்னியாகுமரிக்கு சென்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜி.பி.எஸ் கருவி மூலம் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகளில் நிகழாத சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது வருத்தத்திற்கு உரியது. 29 மற்றும் 30-ம் தேதிகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

மருத்துவ வசதிகள் அடங்கிய கப்பல்களை கொண்டு தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்த கப்பல்கள் 36 மீனவர்களை காப்பற்றி உள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடிநீர் தேவை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com