தீபாவளி ஷாப்பிங்-திருப்பூர் பஜார்களில் குவியும் பொதுமக்கள்

திருப்பூர் மாநகரில் புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய பஜார்களில் பொதுமக்கள் அலை அலையாய் திரண்டனர்.
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள ஜவுளிக்கடையில்  ஆடைகளை பார்வையிடும் பொதுமக்கள்.
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஆடைகளை பார்வையிடும் பொதுமக்கள்.
Published on: 

திருப்பூர்:

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் ஜவுளிகள் வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள்  கூட்டம் அலைமோதி வருகிறது.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக  ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அனைத்து ஜவுளிக்கடைகளிலும் பொதுமக்கள் திரண்டனர்.

திருப்பூர் மாநகரில் புதுமார்க்கெட் வீதி, குமரன் ரோடு  உள்ளிட்ட  முக்கிய பஜார்களில் பொதுமக்கள் அலை அலையாய் திரண்டனர். இதனால்  முக்கிய பஜார்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஏற்கனவே பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்  உள்ளதால் பொதுமக்கள் முககவசம் அணிந்து கடைகளுக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். முககவசம் அணியாமல் வருபவர்களை கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று  நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடை பணியாளர்கள் கடை முன்பு  நின்று பொதுமக்களை சோதனை செய்து அனுப்பினர். முககவசம் அணியாதவர்களுக்கு அணியுமாறு அறிவுறுத்தி அதன்பிறகு உள்ளே அனுப்பி வைத்தனர். மேலும் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது.

இருப்பினும் முக்கிய பஜார்களில்  பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து சாலையோர கடைகளில் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை  வாங்கினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து கடைகளிலும்  ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேப்போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ் இன்னும் வழங்கப்படவில்லை. இன்னும் சில தினங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு இன்னும்  கூட்டம் அதிகரிக்கும்.

எனவே  மாநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு  போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட உள்ளது.

X