

சென்னை:
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை தாங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவிற்கு அழைப்பு விடுத்தனர். ஜெயலலிதாவின் வாரிசு நீங்கள்தான். அவரது இடத்தில் இருந்து கட்சியை நீங்களே வழி நடத்தி செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தினமும் தி.நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு அ.தி.மு.க.வினர் கூடி தீபாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு தீபாவை கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதை ஏற்காமல் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்கிற அமைப்பை தீபா தொடங்கினார். அ.தி.மு.க. தீபா அணி என்று இந்த அமைப்பு அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதன் பின்னர் அடிக்கடி அறிக்கை வாயிலாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் ஆகியோரை தீபா கடுமையாக சாடினார்.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீடு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலா அவரது மரணத்திற்கு பிறகும் அங்கேயே வசிக்க தொடங்கினார். இது சசிகலா எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபாவுக்கும், அவரது சகோதரர் தீபக்குக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் சொந்தமாக இருக்க முடியும். சசிகலா எப்படி அதற்கு சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்வியும் எழுந்தது.
ஆனால் சசிகலா குடும்பத்தினரே தொடர்ந்து போயஸ் கார்டனில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் யாரும் வசிக்க தயங்கினர். இதனால் ஆள் இல்லாத வீடாக அது மாறியது.
இதனால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் போயஸ் கார்டன் களை இழந்தது. இதனை தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் தனியார் பாதுகாவலர்களே பணியில் உள்ளனர். வீட்டில் யாரும் வசிக்காத நிலையில் ஒரு சில பணியாளர்களே அங்கு உள்ளனர்.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லமும் சிக்கியுள்ளது. இதனால் அது முடக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தீபா ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு திடீரென சென்றார். காலை 9.15 மணியளவில் தனது காரில் சென்று இறங்கிய தீபா ஜெயலலிதா வீட்டின் முன்புள்ள பிரமாண்டமான இரும்பு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அவருடன் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகி ராஜாவும் உடன் சென்றார். அப்போது அவரது சகோதரர் தீபக் போயஸ் கார்டன் இல்லத்திலேயே இருந்தார்.
வீட்டு வராண்டாவில் தோட்டம் அமைக்கப்பட்டு அழகிய பூச்செடிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த பகுதியில் ஜெயலலிதாவின் பெரிய புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்துக்கு தீபா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தீபக்கும் உடன் இருந்தார்.
ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலாவின் போட்டோக்களும் இருந்தன. அவைகளை தீபா அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வீட்டிற்குள் தீபா நுழையும் போது ஆங்கில தொலைக்காட்சி நிருபர் ஒருவரும் ஒளிப்பதிவாளருடன் உள்ளே சென்றிருந்தார். அவர் அங்கு நடைபெற்ற சம்பவங்களை படம் பிடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போயஸ் கார்டன் பாதுகாவலர்கள் நிருபரையும், ஒளிப்பதிவாளரையும் வெளியில் செல்லுமாறு கூறினார்கள். அப்போது திடீரென பாதுகாவலர்கள் ஆங்கில தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கி அவர்களது கேமராவையும், செல்போனையும் பறித்தனர்.
இந்த நேரத்தில் தீபாவையும் வெளியில் செல்லுமாறு பாதுகாவலர்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து தீபா தனது கணவர் மாதவனுக்கு போன் செய்து பேசினார். நான் போயஸ் கார்டன் வந்துள்ளேன். இங்கு எனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. உடனே வாருங்கள் என்று கூறினார்.
இதனையடுத்து மாதவன் அங்கு விரைந்து சென்றார். இதற்கிடையே போயஸ் கார்டன் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மாதவனை முதலில் அனுமதிக்கவில்லை. கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மாதவன் போயஸ் கார்டன் வீட்டிற்குள் சென்றார்.
அவரை தீபக் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தீபக்குக்கும், தீபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது தீபா தீபக்கை திட்டினார். இதனால் போயஸ் கார்டன் வீட்டில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பாதுகாவலர்கள் தீபாவையும், மாதவனையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
அப்போது தீபாவும்- மாதவனும் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் தள்ளு-முள்ளும் ஏற்பட்டது. இதில் தீபாவும், மாதவனும் தாக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினர்.
அதன் பிறகு தீபா போயஸ் கார்டனில் நடந்தது பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
போயஸ் கார்டனுக்கு வருமாறு எனது சகோதரர் தீபக் அழைப்பு விடுத்தார். அதன் பேரிலேயே நான் அங்கு சென்றேன். என்னையும், எனது கணவரையும் வரவழைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். எனது சகோதரர் தீபக் மீதும் தாக்கியவர்கள் பற்றியும் போலீசில் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.