ஜெயலலிதா வகித்த பதவிகளை பெற சட்ட ரீதியாக எனக்கு உரிமை உள்ளது- தீபா

ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக தான் வகிக்க முடியும் என்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தீபா பேசினார்.
ஜெயலலிதா வகித்த பதவிகளை பெற சட்ட ரீதியாக எனக்கு உரிமை உள்ளது- தீபா
Published on

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடந்தது. கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். அப்போது, தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? அல்லது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா அல்லது தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என 3 கேள்விகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன.

இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

பின்னர் ஜெ.தீபா பேசுகையில், ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தெண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் சகித்து கொள்கின்றனர்.

பின்னர் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர். இது தவறு.

நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு. க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com