தேவர் தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு

தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவிற்கு ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன் தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தேவர் தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு
Published on

மதுரை:

மதுரை அண்ணாநகரில் உள்ள அரசு வங்கியில் வைக்கப்பட்டுள்ள தேவர் தங்க கவசத்தை வழங்குவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்-தினகரன் அணி தரப்பினரிடம் இன்று காலை 10 மணி முதல் வங்கி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. அப்போது தினகரன் அணியினர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தங்க கவசத்தை வழங்கக்கூடாது என வலியுறுத்தினர்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தங்க கவசத்தை தங்களிடமே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு ஏற்படவே வங்கி அதிகாரிகள் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். 3 மணி நேர ஆலோசனைக்கு பின் தேவர் தங்க கவசத்தை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதித்தனர்.

இதையடுத்து கலெக்டரிடம் தங்க கவசத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு கலெக்டரிடம் இன்று மாலைக்குள் தங்க கவசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. பின்னர் பலத்த பாதுகாப்போடு கொண்டுசெல்லப்படும் தங்க கவசம் இன்று மாலை அல்லது நாளை காலை தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அணிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com