திருப்பூர் அருகே வியாபாரி அடித்து கொலை: உறவினர்கள் கைது

திருப்பூர் அருகே வியாபாரியை கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் அருகே வியாபாரி அடித்து கொலை: உறவினர்கள் கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் கார்த்திக் (33). இவர் திருப்பூர் அம்மாபாளையம் ஐஸ்வர்யா நகரில் தங்கி உப்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடன் உறவினர்களான பிரகாஷ், விஜய் ஆகியோரும் குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்தனர். சம்பவத்தன்று இரவு 10 மணி வரை கார்த்திக் வீடு திரும்பவில்லை.

அவரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தேடி வந்தனர். அப்போது அவர் அப்பகுதியில் மயங்கி கிடந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார்.

இது குறித்து 15 வேலம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கார்த்திக் கீழே விழுந்து இறந்து விட்டதாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சண்முகத்திற்கு சந்தேகம் எழுந்தது. அவர் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். கார்த்திக் உறவினர்கள் பிரகாஷ், விஜய் ஆகியோரை பிடித்து விசாரித்தார்.

அப்போது கார்த்திக்கை அவர்கள் அடித்து கீழே தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்தது.

சம்பவத்தன்று பிரகாஷ் மனைவி ஐஸ்வர்யா கார்த்திக் மொபட்டை எடுத்து சென்றுள்ளார்.

அப்போது எற்பட்ட விபத்தில் மொபட் சேதம் அடைந்தது. இதனை கார்த்திக் கேட்ட போது விஜய், பிரகாஷ் ஆகியோர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.

கடந்த 1-ந் தேதி இவர்கள் 3 பேரும் மது அருந்தி உள்ளனர். அப்போதும் இப் பிரச்சினை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விஜய், பிரகாஷ் ஆகியோர் கார்த்திக்கை அடித்து கீழே தள்ளி விட்டனர்.

இதில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். கொலையை 2 பேரும் மறைத்து கீழே விழுந்து இறந்தாக நாடகமாடி உள்ளனர்.

இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் விஜய், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com