வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு- மாமனார் மைத்துனர்கள் ஆத்திரம்

முதலியார்பேட்டையில் மனைவியுடன் வாழ்க்கை நடத்தாமல் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய வாலிபரை மாமனார், மைத்துனர்கள் அரிவாள்மனையால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை மாகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கலைச்செல்வி (வயது24). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். 

கலைச்செல்விக்கும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த மதியழகன்(25) என்ற வாலிபருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். மதியழகனுக்கு  ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ள நிலையில் அவருடன் வாழ்க்கை நடத்தாமல் கடந்த சில வருடமாக கலைச்செல்வியுடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனையறிந்த மதியழகனின் மாமனார் முருகன் பலமுறை கண்டித்து தனது மகளுடன் குடும்பம் நடத்துமாறும் அறிவுறுத்தி வந்தார். ஆனாலும் மதியழகன் கலைச் செல்வியின் வீட்டிலேயே தங்கி இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வியின் வீட்டில் மதியழகன் இருந்தார். அப்போது மதியழகனின் மாமனார் முருகன் மற்றும் மதியழகனின் மைத்துனர் 2 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் கலைச்செல்வியுடன் உள்ள உறவை துண்டித்து விட்டு தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் மதியழகன் இதனை ஏற்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மதியழகனின் மாமனார் மற்றும் மைத்துனர்கள் மதியழகனை கை,கால்களை கட்டிப்போட்டு அவரை சரமாரியாக தாக்கினர். 

அப்போது இதனை கலைச்செல்வி தடுக்க முயன்றார். அவரையும் அவர்கள் கையால் தாக்கினர். அதோடு ஆத்திரம் தீராத முருகன் அருகில் கிடந்த மரக்கட்டையாலும் அரிவாள்மனையை எடுத்தும் மதியழகனின் தலையில் அடித்தார். இதில் மதியழகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி போனதால் பயந்து போன அவரது மாமனார் மற்றும் மைத்துனர்கள் மதியழகனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதியழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தார். மற்றும் அவரது மகன்கள் 2 பேரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com