சென்னை சாலைகளில் போக்குவரத்து முடக்கம்

கொரோனா பீதி காரணமாக சென்னையில் இன்று மாநகர பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பெரும்பாலான சாலைகளில் சில மோட்டார் சைக்கிள்களும், கார்களும் மட்டுமே சென்றன.
போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ள அண்ணா சாலை
போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ள அண்ணா சாலை
Published on

சென்னை:

கொரோனா பீதியால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மதுரவாயல் சாலை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தி.நகரை சுற்றி உள்ள சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

காலை 8 மணிக்கு தொடங்கும் போக்குவரத்து இரவு 10 மணி வரை நீடிக்கும். அதன்பிறகே சாலைகளில் வாகங்களின் எண்ணிக்கை குறையும்.

தற்போது கொரோனா பீதி காரணமாக சென்னையில் இன்று போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. பெரும்பாலான சாலைகளில் சில மோட்டார் சைக்கிள்களும், கார்களும் மட்டுமே சென்றன.

இதனால் போக்குவரத்து சிக்னல்கள் வாகன நெரிசல் இன்றி காணப்பட்டது. சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும். ஆனால் இன்று சிக்னல்கள் அனைத்தும் செயல்பட்டாலும் வாகனங்கள் குறைவாகவே சென்றதால் பலர் சிக்னல்களை மதிக்காமல் செல்வதை காண முடிந்தது.

மாநகர பஸ்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மெரினாவில் நீச்சல் குளம் மூடப்பட்டு இருந்தது.

மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இருப்பது வழக்கம். இப்போது காதல் ஜோடிகளும் கொரோனா வைரசுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு வருவது குறைந்தது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com