சமூக நீதித்துறை மந்திரி தனஞ்செய் முண்டேவுக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா சமூக நீதித்துறை மந்திரி தனஞ்செய் முண்டேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தனஞ்செய் முண்டே
தனஞ்செய் முண்டே
Published on

மும்பை :

மகாராஷ்டிராவில் சமூக நீதிதுறை மந்திரியாக இருப்பவர் தனஞ்செய் முண்டே (வயது44). தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர். சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் பீட் மாவட்டத்தை சேர்ந்த இவர் பா.ஜனதா முன்னாள் மந்திரி பங்கஜா முண்டேவின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார்.

தனஞ்செய் முண்டே சமீபத்தில் பீட்டில் தனியார் கொரோனா ஆய்வகம் ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாநில மந்திரி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதேபோல கடந்த 10-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டு உள்ளார்.

இந்தநிலையில் வெளிமாவட்டத்தில் இருந்து மும்பை வந்ததற்காக மந்திரி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. இந்த முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது, மந்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மந்திரி தவிர அவரது 2 உதவியாளர்கள், கார் டிரைவர்கள் 2 பேர் மற்றும் சமையல்காரருக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மந்திரி மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேருக்கு நோய் அறிகுறிகள் எதுவுமில்லை. எனவே அவர்கள் எந்த ஆபத்தும் இன்றி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனஞ்செய் முண்டே மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படும் 3-வது மந்திரி ஆவார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த வீட்டு வசதி துறை மந்திரி ஜித்தேந்திர அவாத், காங்கிரசை சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனஞ்செய் முண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டதை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது உண்மை தான். தற்போது அவர் நலமாக உள்ளார். அவருக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை. சிறிய அளவில் மூச்சுத்திணறல் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தற்போது அவரை பிரிச் கேண்டி ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளோம். அவர் ஒரு போராளி. 8 அல்லது 10 நாளில் குணமாகிவிடுவார். மந்திரியின் ஊழியர்களுக்கு முதலில் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். தனஞ்செய் முண்டே கலந்துகொண்ட மந்திரி சபை கூட்டம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. 5 பேர் கலந்துகொண்ட கட்சி ஆண்டு விழா 5 நிமிடங்களே நடந்தது. ஒருவேளை இந்த கூட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் சோதனை மேற்கொள்ளப்படும். நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை பொதுஇடங்கள், பணிபுரியும் இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com