

நெல்லை:
தமிழகத்தில் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில எல்லைகளில் முழுநேர கண்காணிப்பில் ஈடுபட்டு, அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள், சினிமா தியேட்டர்கள், பள்ளிக்கூடங்கள் முதலியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் தொடர்ந்து இருந்தால் அவர்களை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும், கொரோனா வைரஸ் இல்லை என்று தெரிந்த பிறகே அவர்களை வீட்டுக்கு அனுப்பவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் இருந்து திரும்பி இருந்தார். அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் தொடர்ந்து இருந்ததால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய் இல்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். ஆனாலும் 1 மாதம் அவரை கண்காணிக்கவும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது போல நேற்று நெல்லை பேட்டையை சேர்ந்த 40 வயதுள்ள ஒருவர் மலேசியாவில் இருந்து திரும்பி இருந்தார். அவருக்கு தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால் அவரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இதில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்று பிற்பகல் அவரையும் டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுபோல ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததில், அவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. இதனால் அவரையும் டாக்டர்கள் பரிசோதித்து சாதாரண வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நெல்லையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பரிசோதனை நடந்தது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரதீப் அபிநவ், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா மற்றும் துணை கமிஷனர்கள் மகேஷ்குமார், சரவணன் ஆகியோருக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை நடந்தது.
இந்த பரிசோதனைகளை டீன் டாக்டர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர்கள் முக கவசம் அணிந்தபடி சென்றனர். நெல்லை மாவட்டத்தில் இன்று முக்கிய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள், மக்களை நேரிடையாக சந்திக்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வெளியில் சென்றனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், அவர்களை அழைத்து சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம்.
கொரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரிந்த பிறகு அவர்கள் பூரண குணமடைந்ததும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக எடுத்து கண்காணித்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.
பொதுமக்கள் சுத்தமாக கைகளை கழுவிய பிறகு சாப்பிடுவதை வழக்கமாக பின்பற்ற வேண்டும். இருமல் உள்ளவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.