

நெல்லை:
கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் பரவியுள்ள இந்த நோய் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த 3 வயது குழந்தையும் அடங்கும். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர மருத்துவ பரிசோதனைகள் அங்கேயே செய்யப்படுகிறது. மேலும் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரதுறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாளை மத்திய சிறைச்சாலையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து புதியதாக சிறைக்கு வரும் கைதிகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் அவர்களை சிறையில் அடைக்காமல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வருகிறார்கள்.
மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.