

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை உள்பட 4 விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ‘கொரோனா’ வரைஸ் அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று வரை 27 ஆயிரத்து 702 பயணிகளுக்கு விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 1927 பேர் தங்களது வீடுகளில் 28 நாட்களுக்கு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவர் மட்டும் கொரோனா வைரஸ் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கவனித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரி கிங் மருத்துவ ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42 பேரின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 38 பேரின் மாதிரி கிண்டி கிங் ஆய்வகத்திற்கும், 4 பேரின் மாதிரி புனே ஆய்வு மையத்திற்கும் அனுப்பப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது மற்றவர்களுக்கு கிருமி பரவாமல் தடுக்க துண்டு அல்லது கைக்குட்டை மூலம் முகத்தை மூட வேண்டும் என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் தியேட்டர், ஷாப்பிங்மால், பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.