ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு

அனைத்து ஏ.டி.எம்.களிலும் முழுமையாக பணம் நிரப்பி வைப்பதோடு தீர்ந்து விட்டால் அதனை உடனுக்குடன் நிரப்பி தட்டுப்பாடு இல்லாமல் பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த அளவில் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். வீட்டில் இருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை இருந்த வாடிக்கையாளர்கள் சேவை பகல் 2மணி வரை குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு அவசிய தேவைக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வசதியை இந்த காலக்கட்டத்தில் அதிகளவு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அனைத்து வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் தற்போது குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே நடைபெறுகின்றன. வங்கி கணக்கில் பணம் போடுதல், கணக்கில் இருந்து எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் மாற்றும் நடவடிக்கை, அரசு கருவூல கணக்கு போன்ற சேவைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன், அடமானக் கடன் உள்ளிட்ட எந்த கடன்களும் வழங்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊழியர்கள் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களும் அவரவர் உடல்நலன் கருதி அவசிய தேவைக்கு மட்டும் வங்கிகளுக்கு வர வேண்டும். குறைந்தபட்ச சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மற்ற சேவைகளுக்காக வங்கிகளுக்கு வருவதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சேவையை வழங்க வேண்டும் என அனைத்து ஊழியர்களுக்கும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் வங்கி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏ.டி.எம். மையங்களில் தொடர்ந்து பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஏ.டி.எம்.களிலும் முழுமையாக பணம் நிரப்பி வைப்பதோடு தீர்ந்து விட்டால் அதனை உடனுக்குடன் நிரப்பி தட்டுப்பாடு இல்லாமல் பணம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே கூட்டத்தை தவிர்த்து பொறுமையாக இருந்து ஏ.டி.எம்.களில் தேவையான பணத்தை எடுத்து செல்ல ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com