ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களிடம் மருத்துவ பரிசோதனை

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நுழைவு வாயில்களில் டிஜிட்டல் தெர்மா மீட்டர் கருவிகளுடன் சுகாதாரத்துறையினர் பக்தர்களை பரிசோதனை செய்தனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களிடம் டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களிடம் டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
Published on

திருச்சி:

திருச்சி மாநகரில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள், மால்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் இன்று தொடங்கியது. இக்கோவிலில் தினமும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விஷேச நாட்களில் 20 ஆயிரம் பேர் வரை வருகிறார்கள்.

இந்த கோவிலின் பிரதான 3 நுழைவு வாயில்களில் சுகாதாரத்துறையின் எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நுழைவு வாயில்களில் டிஜிட்டல் தெர்மா மீட்டர் கருவிகளுடன் சுகாதாரத்துறையினர் பக்தர்களை பரிசோதனை செய்தனர். நோய் அறிகுறியுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த பக்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் காய்ச்சல், சளி- இருமல் இருந்தால் கோவிலுக்குள் அனுமதிக்காமல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கோவிலுக்குள் பக்தர்கள் கைகழுவும் இடங்களில் கிருமி நாசினி லிக்யுட் சோப்பு வைக்கப்பட்டது. கோவில் முழுவதும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த மருந்து தெளிக்கப்படுவதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார். இதனிடையே கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். மருத்துவ பரிசோதனையை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதேப்போல் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் இன்று தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com