குஜராத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியின்போது கடமைக்கு முன்னுரிமை தந்த போலீசார்

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியின்போது சொந்த கடமைகளை பின்னுக்கு வைத்து விட்டு களத்தில் நின்ற போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.
போலீசார்
போலீசார்
Published on

ஆமதாபாத்:

கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போரிட்டு வருகிறது.

இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் தங்களுக்கு பரவாமல் தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளுக்குள் உள்ளனர். ஆனால் போலீசார் அப்படி இருக்க முடியாது.

அவர்கள் களத்தில் இறங்கி, ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறதா, பொதுமக்களுக்கு வேறு பிரச்சனைகள் எழுகிறதா, விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழ்கின்றனவா என்பதை கண்காணிக்க வீதிகளிலும், சாலைகளிலும்தான் தங்கள் நாட்களைக் கடத்துகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அவர்கள் தங்கள் சொந்தக் கடமைகளைக்கூட பின்னுக்குத் தள்ளிவிட்டு, மக்கள் பணியில்தான் தங்களை ஈடுபடுத்துகின்றனர்.

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்வுகள், போலீசாரின் துணிச்சலுக்கும், கடமை உணர்வுக்கும் சான்று அளிப்பதாக அமைந்திருக்கிறது.

இங்கு தஹோத் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர் பி.கே.ஜாதவ். இவரது மூத்த சகோதரர் சில தினங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் மரணம் அடைந்து விட்டார்.

பி.கே.ஜாதவ், விடுமுறை கூட எடுக்காமல் அவசர அவசரமாக அங்கு சென்று, தன் மூத்த சகோதரரின் இறுதிச் சடங்கில் மட்டும் கலந்து கொண்டு விட்டு உடனடியாக பணிக்கு திரும்பி விட்டார்.

இது முதல்-மந்திரி விஜய் ரூபானியின் கவனத்துக்கு சென்றது. அவர் உடனே ஜாதவை நேரில் அழைத்து அவரது கடமை உணர்வுக்கு பாராட்டு தெரிவித்தார்.

காம்போய் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்பவர் இந்திரவிஜய்சிங் ரெஹ்வார். இவரும் துணிச்சல் நிறைந்த போலீஸ்காரர் ஆவார்.

ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளபோதும், மருத்துவ விடுப்பில் செல்லாமல் போலீஸ் வேனில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவரை சபர்கந்தா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைதன்யா மாண்ட்லிக் பாராட்டி உள்ளார்.

மோர்பி மாவட்டத்தில் விபுல் புல்டாரியா என்ற போலீஸ்காரருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அவர் மகிழ்ச்சியுடன் சென்று குழந்தையை பார்த்து பாசத்தைப் பொழிந்து விட்டு, உடனே பணிக்கு திரும்பிவிட்டார். விடுமுறை கூட எடுக்கவில்லை. இதை மாநில போலீஸ் துறை பாராட்டி டுவிட்டரில் பதிவு வெளியிட்டு கவுரவித்து இருக்கிறது.

கட்ச் மாவட்டத்தில் பூஜ் நகரில், அல்கா தேசாய் என்ற பெண் போலீஸ் இருக்கிறார். இவரது கணவரும் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கூட அல்கா தேசாய் விடுமுறை எடுக்காமல், தனது குழந்தையை எடுத்துக்கொண்டு, அந்தக் குழந்தையுடனே பணி செய்கிறார். இது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியவந்து அல்கா தேசாயின் கடமை உணர்வை பாராட்டியதுடன், அவரை அவரது வீட்டின் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு மாற்றித் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்.

இது பற்றி அல்கா தேசாய் கூறும்போது, “நாட்டுக்கு சேவை செய்யத்தான் நான் போலீஸ் துறையில் சேர்ந்தேன். நாட்டுக்கு நான் அதிகமாக தேவைப்படுகிற இந்த தருணத்தில் என் சொந்த நலனுக்காக நான் விடுமுறை எடுக்க முடியாது. அதே நேரத்தில் நான் ஒரு தாயாகவும் உள்ளேன். எனவே தான் என் மகளை என்னுடன் எடுத்துச் சென்று என் கடமையைத் தொடர முடிவு செய்தேன்” என குறிப்பிட்டார்.

இதே போன்று வதோதரா நகரில் போலீசாக வேலை செய்கிற ஜோதி பரிக் என்ற பெண், ஒரு விபத்தை சந்தித்து நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போட்டுள்ள நிலையிலும், விடுமுறை எடுக்காமல் தனது கடமையை தொடர்கிறார். இவரை மாநில போலீஸ்துறை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரையும் பொதுமக்களும் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com